விழுப்புரம், செப். 18: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்தவர் மோகன்ராஜ்(37). இவர் கடந்த 2022 ஜனவரி 26ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும். ரூ.7 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.


