பூர்வீக சொத்தின் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம் கேட்ட விஏஓவுக்கு பணம் கொடுக்க பிச்சை எடுத்து விவசாயி போராட்டம்
உளுந்தூர்பேட்டை, செப். 11: பூர்வீக சொத்தின் கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதாக கூறி, விவசாயி ஒருவர் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே கீழப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல்சலீம்ஷேக்(45), விவசாயி. இவருக்கு நொணைவாடி கிராம ஊராட்சியில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த சொத்தின் கூட்டு பட்டாவில் தனது பெயரை சேர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை பலமுறை அணுகியதாகவும், அப்போது அவர் பெயர் சேர்க்க லஞ்சம் கேட்டதாகவும் அப்துல் சலீம் ஷேக் குற்றம்சாட்டியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால் மனமுடைந்த அவர், அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நேற்று தட்டேந்தியபடி பொதுமக்களிடம் பணம் கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கையில் ஏந்தியிருந்த பதாகையில், வாழ்க தமிழ்... ஒழியட்டும் ஊழல்... பூர்வீக சொத்தில் கூட்டு பட்டாவில் பெயர் சேர்க்க வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டார். என்னிடம் பணம் இல்லை. அதனால் மக்கள் மத்தியில் பிச்சை எடுக்கிறேன்” என தனது குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தார்.
அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாக கூறி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையத்தில் தட்டேந்தி பிச்சை எடுத்து விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் தவெக அரசு பொறுப்பு ஏற்றவுடன் லஞ்சம் முற்றிலும் ஒழித்து விட்டதாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூறி வரும் நிலையில் விவசாயி ஒருவர் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் தட்டேந்தி பணம் வசூல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


