புதுச்சேரி, செப். 10: சகோதரரை தாக்கிய விவகாரத்தில் தமிழக நிதியமைச்சர் மீதான வழக்கை நாளைக்கு (11ம் தேதி) புதுச்சேரி நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரியகுளோத் வீட்டுக்குள் நுழைந்து அவரையும், அவரது மனைவி கேரளினை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இதனிடையே, கடந்த 4ம் தேதி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி நேற்று காலை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகர் (பொறுப்பு) முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் மரியவில்சன் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். மரிய குளோத்தின் மனைவி கேரளின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இவ்வழக்கு தொடர்பான வீடியோ ஆதரங்களை பத்திரிகையாளரிடம் கேரளின் வெளிப்படுத்திவிட்டார். இது நீதிமன்றம் அவமதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சரின் வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். இதற்கு, கேரளின் தரப்பு வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த அநியாயங்களை பத்திரிகையாளரிடம் வெளிப்படுத்தியது நீதிமன்றம் அவமதிப்பின் கீழ் வராது. மேலும், இதனை நீதிமன்றம் அவமதிப்பாக எடுத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட பெண்ணை அமைதிப்படுத்துவது போல் ஆகிவிடும். இதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் வீடியோக்கள், வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது ஊடகங்களில் வெளியாகி உள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என வாதாடினார். இருதரப்பு வாதத்தை கேட்ட பின்னர், இந்த வழக்கை நாளைக்கு (11ம் தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நிதியமைச்சர் மரிய வில்சன் வழக்கறிஞர் அஜித்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 2 மனுக்குள் இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. ஒன்று ரெகுலர் வழக்கு மற்றொன்று நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு. இதில், ரெகுலர் வழக்கு 11ம் தேதிக்கும், நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு இருதரப்பு வாதங்களை கேட்டறிந்து, அந்த வழக்கையும் 11ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார், என்றார்.
இதேபோல், மரிய குளோத் மனைவியின் வழக்கறிஞர் பிரவீன் கூறுகையில், அமைச்சர் தரப்பினர் தாக்கல் செய்த நீதிமன்றம் அவமதிப்பு மனு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (நேற்று) வந்தது. வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரத்தை பத்திரிக்கைகளுக்கு கொடுத்து விட்டார். எனவே கேரளின் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். அவருக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என நிதியமைச்சர் வில்சன் தரப்பு வழக்கறிஞர்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர். நாங்கள் வலுவாக எதிர்த்து, இதனை ஏற்க கூடாது, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தோம்.மேலும், தன்னுடைய பிரச்னை மற்றும் கொடுமைகள் தொடர்பான வீடியோவை தான் ஊடகங்களிடம் தெரிவித்தார். இது நீதிமன்றம் அவமதிப்பின் கீழ் வராது. கேரளின் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக தான் நீதிக்காக கடுமையாக போராடி வருகிறார். எவ்வளவு அச்சுற்றுதல், சாவல்கள் இருந்தபோதும் கேரளின் மற்றும் அவரது கணவர் மரியகுளோத் ஆகியோர் நீதிமன்றம் வாசலில் காத்திருப்பது நீதி கிடைக்கும் என காத்து கிடக்கின்றனர், என்றார்.


