Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெல்லி காரை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி விழுப்புரம் அரசு டாக்டரிடம் ரூ.15 லட்சம் மோசடி- வாலிபர் கைது; மனைவிக்கு போலீசார் வலை

விழுப்புரம், செப். 10: விழுப்புரம் அருகே டெல்லி காரை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி டாக்டரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் முகுந்தன்(46). இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இதனிடையே கார் வாங்குவதற்காக முகுந்தன் முன்வந்த நிலையில் அவரிடம் டிரைவராக பணியாற்றிவரும் விழுப்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனக்கு தெரிந்த விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன்(34), அவரது மனைவி சந்திரலேகா(30) ஆகியோர் டெல்லி கார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர்களிடம் அறிமுகமான டாக்டர் முகுந்தன் கார் விலை குறித்த விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

அப்போது புருஷோத்தமன் டெல்லியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் குறைந்த விலைக்கு வருவதாகவும், அதனை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதன்படி புருஷோத்தமன் கேட்ட ரூ.15.15 லட்சம் பணத்தை தம்பதியின் போன்பே, ஜிபேவுக்கு அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் பணம் கொடுத்த நிலையில் தற்போதுவரை கார் வாங்கிக் கொடுக்காததால் முகுந்தன் அவர்களிடம் சென்று தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் தற்போதுவரை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் முகுந்தன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் புருஷோத்தமன், சந்திரலேகா மீது வழக்கு பதிவு செய்து நேற்று புருஷோத்தமனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சந்திரலேகாவை தேடி வருகின்றனர்.