மரக்காணம், செப். 10: மரக்காணம் மேட்டு தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (35). இவர் மரக்காணம் மேல வீதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி அருகில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒரு டிப் டாப் ஆசாமி ராஜ பெருமாளின் இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டிப் டாப் ஆசாமி தனது ஜிபே கணக்கில் பணம் உள்ளதாகவும், அதனால் தனது ஜிபே கணக்கில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ 40 ஆயிரம் அனுப்புகிறேன்.
இதற்கு பதில் நீங்கள் எனக்கு ரொக்கமாக பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.டிப்டாப் ஆசாமி கூறிய வார்த்தையை நம்பிய ராஜபெருமாள் தனக்கு ஜிபே மூலம் பணத்தை அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த டிப் டாப் ஆசாமியும் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பி உள்ளார். அப்போது டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யக்கூடிய அனைத்தும் சரியாக இருந்துள்ளது. தொடர்ந்து ராஜபெருமாள் ரூ.40 ஆயிரத்தை டிப்டாப் ஆசாமியிடம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை வாங்கியவுடன் அந்த டிப் டாப் ஆசாமி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.
சில மணி நேரத்தில் சந்தேகம் அடைந்த ராஜபெருமாள் அவரது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தை ஆய்வு செய்து உள்ளார். அப்போது அந்த டிப் டாப் ஆசாமி அனுப்பிய ரூ 40 ஆயிரம் மட்டும் அவரது வங்கிக் கணக்கில் வரவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ பெருமாள் வங்கி பரிவர்த்தனை முறைப்படி பல்வேறு ஆய்வுகளை செய்து பார்த்துள்ளார். அப்போதும் அவரது கணக்கில் 40 ஆயிரம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ பெருமாள் சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


