Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுச்சேரி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் கோவையை சேர்ந்த 2 பேரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை

புதுச்சேரி, செப். 9: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன் (70). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். கடந்த 2023ல் இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அசோகன், ஆஸ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.98 லட்சம் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் லாபத்துடன் சேர்த்து ரூ.2.5 கோடி கிரிப்டோ கரன்சி இருப்பதாக அவரது கணக்கில் காண்பித்துள்ளது. இதனை விற்று பணமாக தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற அசோகன் முயன்றார். ஆனால் இணையதள பக்கம் திடீரென முடக்கப்பட்டது. அதன்பிறகே அவருக்கு தான் ஏமாற்றப்பட்டதும், மோசடி நடந்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து அசோகன், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த 9 பேர் இதுபோல் ஆஷ்பேவில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளதும், இந்தியா முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து வசூல் செய்து, ஒரே நாளில் கிரிப்டோ கரன்சியை மதிப்பில்லாமல் செய்து, பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக கோயம்புத்தூரை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40), தாமோதரன் (52), பாபு (எ) சையது உஸ்மான் (51), இம்ரான் பாஷா (37) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கிப்டோ கரன்சி மோசடி வழக்கில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் பல கோடிக்கு மோசடி நடந்துள்ளதால், அமலாக்கத்துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவ்வழக்கில் கைதான நித்திஷ்குமார், இம்ரான் பாஷா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க புதுச்சேரி தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி ஆனந்த் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நித்திஷ்குமார், இம்ரான் பாஷா ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை சென்னை மண்டல துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மாலிக் தலைமையிலான குழுவினர், 2 பேரையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.