கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட லாட்ஜ் உரிமையாளரை கடத்தி தாக்கி 6 பவுன் நகைகள் பறிப்பு: 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு வலை
புதுச்சேரி, செப். 9: புதுச்சேரியில் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட விடுதி உரிமையாளரை கடத்தி தாக்கி 6 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (35). இவர், விடுதி நடத்தி வருகிறார். இவருக்கு, புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி ரேவதி என்பவர் பழக்கமாகி உள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக ரேவதிக்கு மனோகர் ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். அதில் ரேவதி ரூ.20 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். மீதம் ரூ.30 ஆயிரத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். பணத்தை கேட்டு அவரை மனோகர் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பணத்தை தராத ரேவதியை, மனோகர் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி ரேவதி, மனோகருக்கு போன் செய்துள்ளார். அப்போது அவர், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், அதனை பெற்றுக் கொள்ள கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள ஆம்புலன்ஸ் நிற்கும் இடத்துக்கு வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய மனோகர், மாலை 4 மணியளவில் அங்கு சென்றுள்ளார். அப்போது ஒரு சரக்கு வாகனம் மனோகர் அருகில் வந்து நின்றுள்ளது. அதில் ரேவதியுடன், ஒரு பெண், 2 ஆண்கள் இருந்துள்ளனர். அவர்கள் மனோகரை அந்த வாகனத்தில் ஏறும்படி அழைத்துள்ளனர். ரேவதியுடன் வேறு நபர்களை கண்டதும் ஏதோ தவறாக இருப்பதாக எண்ணிய மனோகர் வாகனத்தில் ஏற மறுத்துள்ளார்.
உடனே அதில் இருந்த ஒரு வாலிபர், திடீரென மனோகரின் செல்போனை பறித்துக் கொண்டார். செல்போனை வாங்க வாகனத்தின் அருகில் சென்ற மனோகரை அவர்கள் குண்டுகட்டாக தூக்கி கடத்தி சென்றுள்ளனர். மொரட்டாண்டி டோல்கேட் சர்வீஸ் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த கும்பல் மனோகரை கடத்தி சென்று, அவரிடமிருந்து செயின், மோதிரம், கைசெயின் உள்பட 6 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து மனோகர், கோரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, ரேவதி, ஒரு பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். ரேவதி மீது தமிழகப் பகுதியில் இதேபோல் கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட லாட்ஜ் உரிமையாளரை கடத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


