சுகாதாரமின்றி தயாரிப்பு; விழுப்புரத்தில் 18 ஸ்வீட் கடைகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்: 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
விழுப்புரம், நவ. 5: விழுப்புரத்தில் தரம் இன்றியும், சுகாதாரமின்றியும் இனிப்பு, காரம் தயாரித்த 18 கடைகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு சீல் வைத்து, ஸ்வீட், கார வகை தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரவகைகள் தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுகாதாரமான முறையிலும், தரமான வகையில் இனிப்புகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரம் பழையபேருந்து நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட இனிப்பு, கார வகை தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் நடத்திய ஆய்வில் காலாவதி தேதி குறிப்பிடாமல் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தியது, சுகாதாரம் இல்லாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 18 கடைகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 150 கிலோ இனிப்பு, கார வகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.


