பண்ருட்டி, ஏப். 30: பண்ருட்டி அருகே திருவிழாவுக்கு வந்த திருநங்கையை கேலி செய்ததால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார், இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வடக்குபாளையம் மூக்குத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பேரரசு (19). இவரது அண்ணன் யோகேஷ், தற்போது திருநங்கையாக மாறி லாஸ்லியா என்ற பெயருடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக திருநங்கை லாஸ்லியா வந்துள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த இளங்கோ, வேலு, விக்னேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து திருநங்கை லாஸ்லியாவை கேலி செய்து அசிங்கமாக பேசியுள்ளனர்.
இதை அவரது தந்தை பலராமன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு கையாளும், தடியாலும், இரும்பு கம்பியாலும் தாக்கிக் கொண்டனர். இதில் பலராமன் (45), அவரது மற்றொரு மகன் வசந்தன் (26) ஆகிய இருவரும் மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த இளங்கே ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார், இளங்கோ, வேலு, விக்னேஷ் மற்றும் பலராமன், வசந்தன், ராஜதுரை ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

