விருத்தாசலம், பிப். 28: அரசு பள்ளியை தரம் உயர்த்தக்கோரி தேர்தலை புறக்கணிக்க போவதாக பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1925ம் ஆண்டு உருவான இந்த பள்ளி தற்போது 100 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இதுவரை நடுநிலைப் பள்ளியாகவே இயங்கி வரும் நிலையில், இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதியினர் பல போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் வருகின்றனர். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணிக்க போவதாக கூறி கடந்த 17ம் தேதி விளாங்காட்டூர் ஊராட்சி நுழைவு வாயில் முன் பேனர் அமைத்துள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தி தர வேண்டும். கிராமத்திற்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்களை செய்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனரில் குறிப்பிட்டிருந்தனர்.தகவல் அறிந்த கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா நேற்று விளாங்காட்டூர் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது தேர்தலை புறக்கணிப்பது தவறு, பள்ளியின் தரம் உயர்த்துவது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து தான் செயல்படுத்த முடியும். அதனால் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க கூடாது என தெரிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் பள்ளியை தரம் உயர்த்தும் வரை தேர்தலை புறக்கணிப்பது உறுதி. நாங்கள் யாரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்து விட்டு, கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
