சொத்துக்காக முதியவர் கழுத்தை நெரித்து கொலை
வானூர், நவ. 12: வானூர் அருகே சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகள் கணவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியை சேர்ந்தவர் கலிவரதன் (73). இவர் கடந்த 9ம் தேதி வானூர் தாலுகா விநாயகபுரம் சுடுகாடு அருகே உள்ள நிலத்தில் பிணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக கலிவரதன் மனைவி ருக்மணி வானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்தேக மரணம் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கலிவரதன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போலீசார் கலிவரதன் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். வளர்ப்பு மகளான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்த லதா (27), அவரது கணவர் சக்திவேல் (40) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கலிவரதன் அவருக்கு சொந்தமான இடத்தை வளர்ப்பு மகள் லதாவின் பெயரில் எழுதி வைத்துள்ளார். தற்போது கலிவரதனை அவர்கள் சரிவர கவனிக்காததால் எழுதிய நிலத்தை மீண்டும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கலிவரதனை கழுத்தை நெரித்ததாகவும், இதனால் மயக்கமடைந்த அவரை வானூர் அருகே உள்ள விநாயகபுரம் கிராமத்தில் எடுத்து வந்து போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கணவன், மனைவி இருவர் மீதும் வானூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தந்தையை வளர்ப்பு மகள் கணவனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.