ரெட்டிச்சாவடி, டிச. 10: கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா(49). கடந்த மாதம் 18ம் தேதி அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை ஓரமாக சித்ரா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த வாலிபர் ஒருவர், சித்ராவிடம் பேச்சு கொடுத்து அவரின் கவனத்தை திசை திருப்பி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்த புகாரின்பேரில், தூக்கணாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சப்-இன்ஸ்பெக்டர் உத்ராம்பாள் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம் வி. அகரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார்(21) என்பவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது வளவனூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் உள்ளது.இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் விதமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் போலீசார் வழங்கினர்.


