பாண்லே ஊழல் முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ பேச்சு
புதுச்சேரி, டிச. 10: பாண்லே நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக மற்றும் தொமுச பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் குருமாம்பேட் பாண்லே நிறுவன வாயில் முன்பு நேற்று காலை நடந்தது. இதில் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பேசியதாவது: 1971ம் ஆண்டுகளில் கிராமப்புற பால் உற்பத்தியாளர் சங்கங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பாண்லே நிறுவனமானது துவக்க காலத்தில் 70 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் கொள்முதலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையும் நடந்தது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான பாலை புதுச்சேரியிலேயே கொள்முதல் செய்த காலம் மாறி, இன்று அண்டை மாநிலத்தில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பால் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நல்ல வாய்ப்புள்ள புதுச்சேரியில் ஊழலால் பாண்லே நிர்வாகம் சீர்கெட்டுள்ளது.
தற்போது 40 ஆயிரம் லிட்டர் பால் தான் உள்ளூர் மக்களிடம் வாங்குகிறார்கள். ரூ.35 லிட்டருக்கு கஷ்டப்பட்டு தருகிறார்கள். வெளி மாநிலத்தில் அதிக கமிஷன் தருவதால் அதிகளவில் பால் வாங்குகின்றனர். புதுச்சேரியில் தனியார் பால் நிறுவனங்கள் வளர்ச்சி பெற பாண்லே நிர்வாகமே காரணம். புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, ஸ்பின்கோ, அமுதசுரபி போன்றவை மூடப்பட்டு தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், பாண்லே நிறுவனம் ரூ.40 கோடிக்கு மேல் கடனை தாங்கி தள்ளாடிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. பெயரளவுக்கு செயல்படும் பாண்லே நிர்வாகத்தில் ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். 15 லட்சம் லிட்டருக்கு பணிகள் செய்யலாம், ஆனால் செய்வதில்லை. கொல்லைப்புற ஆட்கள் திணிப்பால் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாண்லே நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நிலம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. கூட்டுகொள்ளையில் அன்றைய தினம் ரூ.20 கோடிக்கு வாங்கினர். அந்த மதிப்பு கிடைக்கவில்லை, பணமும் கிடைக்கவில்லை. அந்த சொத்தை வைத்து கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. அதை வாங்கியவர் மீது நடவடிக்கை இல்லை. மோசடியில் பெரும் பணம் கைமாறியுள்ளது. தற்போது மோசமான நிறுவனத்திடம் லிட்டருக்கு ரூ.47 கொடுத்து வாங்குகின்றனர். அமுல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறீர்கள். பல வகையிலும் பணத்தை பிரித்து கொடுத்துள்ளனர். பாண்லே நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும். பாண்லே நிர்வாகத்தை மீண்டும் லாபத்தில் இயக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். பாண்லே நிர்வாக சீர்கேட்டிற்கான ஆதாரம் இருப்பதால், அடுத்து நீதிமன்றத்தை நாடுவோம். இப்போராட்டம் தீவிரமடையும் என்றார்.


