6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை 48 வயது தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுச்சேரி, டிச. 10: 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 48 வயது தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி (48). விவசாய கூலி தொழிலாளி. இவர் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தில் உள்ள தங்கையை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு பழனி அடிக்கடி செல்வது வழக்கம். அதுபோல், கடந்த 29-7-2021 அன்று அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு 6 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். பழனி, அந்த சிறுமியை ஏமாற்றி, அதே பகுதியில் உள்ள கூரை வீட்டுக்கு கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வந்து சிறுமியை பழனியிடம் இருந்து மீட்டுள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார், போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பழனியை கைது செய்தனர். இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கினை நீதிபதி சுமதி விசாரித்து, குற்றவாளி பழனிக்கு போக்சோ சட்டப்பிரிவு 10ன் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், கடத்தல் குற்றத்துக்காக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், தண்டனையை ஏகக்காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.


