புதுச்சேரி, மே 1: புதுச்சேரியில் கார் டயர் பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்த குடும்பத்தினரை போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் தானே காரின் டயரை கழற்றி மாற்றி, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி விவிபி நகரை சேர்ந்த ஒரு ஆண், இரு பெண்கள் என ஒரு குடும்பத்தினர் திருக்கனூருக்கு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். அப்போது வழுதாவூர் சாலை ஊசுடு ஏரி அருகே கார் சென்றபோது பின்பக்க டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் காரில் வந்தவர்கள் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு வெளியே நின்றிருந்தனர். இதில் காரில் வந்தவர் காரின் டயரை கழற்ற முயன்ற போது, அவரால் கழற்ற முடியாமல் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக தவித்து கொண்டிருந்தார். அப்போது பத்துகண்ணு சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இருந்த மேற்கு போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் டுனேஷ்குமார், பஞ்சரான கார் அருகே சென்று டயரை தானே கழற்றி மாற்றி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். இதனை அவ்வழியே சென்ற ஊசுடு பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். போக்குவரத்து காவலரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
+
Advertisement



