திட்டக்குடி, ஆக. 29: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள ஆக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் கணேசன் (38). இவர் திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட இடைச்செருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணேசன் நேற்று சொந்த அலுவல் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று காலை கருணாநிதி வீட்டிற்கு அவரது உறவினர் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து கணேசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து ராமநத்தம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் நகை எதுவும் இல்லாததால் பீரோவில் வைத்திருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



