Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்ணாடத்தில் பரபரப்பு; வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் கடத்தல்? 8 மணி நேரத்திற்கு பின் போலீசில் ஆஜர்

விருத்தாசலம், ஆக. 29: பெண்ணாடம் அருகே வெளிநாட்டிலிருந்து வந்த வாலிபர் கடத்தப்பட்டதாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 8 மணி நேரத்திற்கு பின் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா மகன் முகமது (48). வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று காலை சுமார் 8 மணியளவில் அரியராவி சாலை பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், முகமதை தாக்கி காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த முகமதுவின் தாயார் பாத்திமா பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எங்கள் குடும்பத்திற்கும், மாளிகைகோட்டம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே எனது மகனை அவர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

பெண்ணாடம் காவல் ஆய்வாளர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டார். வாலிபர் கடத்தப்பட்ட செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, பாத்திமாவிடம் தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட முகமது சுமார் 8 மணி நேரத்திற்குப் பிறகு பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், என்னை யாரும் கடத்தவில்லை. நிலப்பிரச்னை தொடர்பாகப் பேசுவதற்காக அசோகன் அழைத்ததன்பேரில்தான் அவருடன் சென்றேன் என முகமது தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.