சுடுகாட்டில் நாட்டு வெடி வெடித்து பாட்டு பாடி; இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 2 வாலிபர்கள் அதிரடியாக கைது!!
விழுப்புரம், அக். 28:விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டை சேர்ந்த பிரபு (20). இவரும். வழுதரெட்டி பகுதியை சேர்ந்த மாதவன் (19). ஆகிய இருவரும் கடந்த 24ம் தேதி இரவு வழுதரெட்டி சுடுகாடு பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தங்களிடமிருந்த நாட்டுவெடியை சுடுகாட்டில் வெடிக்க வைத்து, பாட்டு பாடி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வைரல் ஆக்கி உள்ளனர்.
இந்த வீடியோ கடந்த சில நாட்களாக விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் ரீல்ஸ் வெளியிட்ட பிரபு உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


