விருத்தாசலம், ஆக. 28: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகர், அருணாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் இன்ப சரஸ்வதி(55). கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் முகுந்தன், கடலூரில் தங்கி புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25ம் தேதி இன்பசரஸ்வதி, சீரடி சாய்பாபா கோயிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து முகுந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டின் முன் நிறுத்தி இருந்த சொகுசு காரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது அப்பகுதி தெருக்கள் வழியாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் ஆகியவைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



