Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆசிரியை வீட்டில் திருடிய 2 பேர் கைது; 38 பவுன் நகைகள், 3 கார்கள் பறிமுதல்: பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

விருத்தாசலம், அக். 23: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகர் அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் இன்பசரஸ்வதி (55). இவர் தொரவளூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சீரடி சாய்பாபா கோயிலுக்குச் சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை வேறு திசைக்கு திருப்பிவிட்டு, வீட்டின் கதவு மற்றும் 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். மேலும், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான காரையும் திருடிக்கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் விருத்தாசலம்-கருவேப்பிலங்குறிச்சி சாலையில் குரங்கு பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்த இருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் விருத்தாசலத்தில் ஆசிரியை வீட்டில் நகை, காரை திருடியவர்கள் என்பது உறுதியானது.

இதையடுத்து 2 பேரையும் விருத்தாசலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், சென்னை கொளத்தூர் ஜம்புலிங்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் மாணிக்கராஜ் (41) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூரை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் பரணிதரன்(30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் இருந்தபோது நண்பர்களாகியுள்ளனர். பின்னர் மாணிக்கராஜ் கோவை சிறையிலிருந்தும், பரணிதரன் சேலம் சிறையிலிருந்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த கையோடு, இரும்பு கம்பி மற்றும் பட்டையுளி கொண்டு பூட்டிய வீடுகளை குறிவைத்து மீண்டும் தொடர் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். மாணிக்கராஜ் மீது தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளும், பரணிதரன் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பெரம்பலூர், சென்னை, செங்குன்றம், திருச்சி விமான நிலையம் அருகில், தாராபுரம் மற்றும் வடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, விருத்தாசலத்தில் திருடப்பட்ட 18 சவரன் மற்றும் வடலூரில் திருடப்பட்ட 20 சவரன் என மொத்தம் 38 சவரன் தங்க நகைகள், திருடப்பட்ட கார், நகைகளை விற்று வாங்கியதாக கூறப்படும் நீல நிற சொகுசு கார் மற்றும் வெள்ளை நிற சொகுசு கார், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக், வெள்ளிப் பொருட்களை விற்று மீதமிருந்த ரூ.1,04,000 ரொக்கப் பணம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடந்த ஆறு மாதங்களாக திருடு போன 5 இருசக்கர வாகனங்கள், மினி டெம்போ, டிராக்டர் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டர், ஆட்டோ ஆகியவைகள் இதே மாதத்தில் விருத்தாசலம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.