Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.75.97 லட்சம் மோசடி செய்தவர் கைது

கடலூர், மே 20: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுக்கூடலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் இளவரசன் என்பவர், மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் அளித்த புகார் மனுவில், நான் விருத்தாசலம் பண்ணை சாலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் வைத்திருந்தேன். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கணங்கூர் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் தமிழ்செல்வன்(29) என்பவர் அறிமுகமாகி, அவர் கடந்த 2.2.2025 அன்று, வெளிநாட்டில் எனக்கு தெரிந்த கம்பெனி உள்ளது. ஆட்களை அனுப்புங்கள் 3 ஆண்டு வேலை அனுமதி, விசா வழங்கப்படும்.

அதற்காக மும்பையில் பயிற்சியும் அளிக்கப்படும் என கூறினார். இதை நம்பி நான் 37 நபர்களின் பாஸ்போர்ட் நகல்களை கொடுத்தேன். விசாவுக்கான தொகையாக தமிழ்செல்வனின் வங்கி கணக்கிற்கு ரூ.38,73,500 மற்றும் அவரது நண்பர் பிரவீன் குமாரின் வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.27,89,459 என மொத்தம் ரூ.66,62,959 அனுப்பினேன். முதலில் 8 நபர்களுக்கு மும்பையில் 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் விசிட் விசா மூலம் 10 நபர்களை ரஷ்யாவுக்கும், 22 நபர்களை கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகருக்கும் அனுப்பினார்கள். மீதமுள்ள 5 நபர்கள் மும்பையில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் ரஷ்யாவுக்கு சென்ற 10 நபர்களுக்கும் ஒரு மாதம் கடந்தும் வேலை வாங்கி தராமல் அலட்சியம் செய்தனர்.

ரஷ்யாவிலும், அல்மாட்டியிலும் உள்ளவர்களை திரும்ப அனுப்ப கேட்டபோது, ரிட்டர்ன் டிக்கெட் தர முடியாது என தமிழ்செல்வனும், பிரவீன் குமாரும் கூறிவிட்டனர். மேலும் நான் அனுப்பிய ஆட்களிடம் அவர்கள் கைச்செலவுக்கு எடுத்து சென்ற ரூ.4,00,000த்தையும் கட்டாயப்படுத்தி பிடுங்கி கொண்டனர். எனது சொந்த செலவில் ரூ.5,30,000 செலவழித்து அனைவருக்கும் டிக்கெட் எடுத்து தாயகம் அழைத்து வந்தேன். தமிழ்செல்வனுக்கு அனுப்பிய ரூ.38,73,500 மற்றும் பிரவீன் குமாருக்கு அனுப்பிய ரூ.27,89,459 ஆக மொத்தம் ரூ.75,97,959 பணத்தை திருப்பி தருமாறு நேரிலும், கைப்பேசியிலும் பலமுறை கேட்டும், அவர்கள் பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர், இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் லிடியா செல்வி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்செல்வன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பிரவீன் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.