புதுச்சேரி, மே 20: ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.99.25க்கு விற்பனை செய்த நிலையில் ரூ.0.87 பைசா உயர்த்தப்பட்டு நேற்று ரூ.100.12க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், டீசல் ரூ.89.39க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.0.88 பைசா உயர்த்தப்பட்டு ரூ.90.27க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே வாரத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதால், ஒன்றிய பாஜ அரசு விலையை குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


