பண்ருட்டி, ஆக. 18: பண்ருட்டி-கடலூர் ரோடு வி.எம்.எஸ் நகரை சேர்ந்தவர் பேரோஸ்பானு. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் இவரது தம்பி முனவர் அலியும் தாயாரும், பேரோஸ்பானுவிற்கு உதவியாக அவரது வீட்டில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று பிரசவ வலி எடுத்ததால் வீட்டை பூட்டி கொண்டு பண்ருட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேன்றனர். பின்னர் பிரசவம் முடித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மரக்கதவு கடப்பாரையால் குத்தி உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போய் இருந்தது.
இது குறித்து முனவர் அலி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை அசோக் நகர் 40வது தெருவை சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


