Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிள்ளை சரமாரி வெட்டி படுகொலை

4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை

புதுவை அபிஷேகப்பாக்கத்தில் பரபரப்பு

தவளக்குப்பம், அக். 17: பிரபல ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுமாப்பிள்ளையை, 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அபிஷேகப்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே உள்ள கரிக்கன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பிரவின்குமார் (27). டைல்ஸ் தொழிலாளியான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான பாம் ரவி கடந்த 2021ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பிரவின்குமார் முக்கிய குற்றவாளி ஆவார்.

எனவே, இவருக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எதிர் தரப்பில் இருந்து பிரவின்குமார் மொபைலுக்கு பலமுறை கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில், பிரவின்குமார் கரிக்கலாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பைக்கை இடித்து கீழே தள்ளியுள்ளனர். பைக்கில் இருந்து கீழே விழுந்த பிரவின்குமாரை, அந்த கும்பல் கத்தியால், அவரது தலை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவின்குமார் இறந்ததை உறுதி செய்த பின்னர் அந்த கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த, தெற்கு பகுதி எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தன், விஜயகுமார் மற்றும் தவளக்குப்பம் போலீசார் மற்றும் கொலையான பிரவின்குமார் தமிழக பகுதியான கரிக்கன் நகர் என்பதால் ரெட்டிச்சாவடி காவல் துறை இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பிரவின்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தவளக்குப்பம்-மடுகரை பிரதான சாலையான அபிஷேகப்பாக்கம் கட்டு கட்டும் பேருந்து நிறுத்தத்தில் இச்சம்பவம் நடந்ததால் அச்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இக்கொலை சம்பவத்தால் அபிஷேகப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும்

ஏற்படுத்தியுள்ளது.