Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விருத்தாசலம் அருகே பரபரப்பு; ஓடும் வேனில் இருந்து தவறி விழுந்த 2ம் வகுப்பு பள்ளி மாணவி படுகாயம்: 1 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பிப்பு

விருத்தாசலம், அக். 17: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது 7 வயது மகள் கனிஷ்கா, விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும், பள்ளிக்குச் சொந்தமான வேனில் கனிஷ்கா உள்பட சக மாணவ, மாணவிகள் ஏறி தங்களது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தனர். வேனை மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் ஓட்டிச் சென்றார். விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை பிரதான சாலையில் உள்ள வயலூர் மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க அவசரகால வழி திடீரென திறந்துகொண்டது.

இதில் நிலைதடுமாறிய மாணவி கனிஷ்கா, ஓடும் வேனில் இருந்து கீழே விழுந்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வேனில் இருந்த மற்ற பள்ளிச் சிறுவர்கள் அலறி கூச்சலிட்டனர். குழந்தைகளின் சத்தத்தை கேட்டு, சிறிது தூரம் சென்ற பின்னரே டிரைவர் வேனை நிறுத்தினார். அதற்குள் சாலையில் விழுந்து பலத்த காயமடைந்த சிறுமியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து கனிஷ்காவை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் பெருமளவில் திரண்டனர். இதனால் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் இருபுறமும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விருத்தாசலம் போலீசார் சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், விபத்துக்குக் காரணமான வேன் டிரைவர் சாதிக் பாஷாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.