மாயமான 7 வயது சிறுமி கதி என்ன? 5 நாட்களாகியும் நீடிக்கும் மர்மம்; 10 தனிப்படைகள், 200 போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறல்: 600 செல்போன்கள் அழைப்புகள் ஆய்வு
விழுப்புரம், அக். 17: செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி பற்றி 5 நாட்களாகியும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில் மேலும் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியரின் 2வது மகள் ஹேமாவது (7), அதே பகுதி தொடக்கப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11ம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு பெற்றோருடன் வீட்டில் தூங்கிய சிறுமி மறுநாள் 12ம்தேதி அதிகாலை பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாயமானாள்.
புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர். எஸ்பி மதிவானன் நடுக்குப்பம் கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை துரிதபடுத்தினார். பின்னர் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள 3 செல்போன் டவர்களில் பதிவான சுமார் 600 அழைப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து, சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுமி மாயமான வழக்கில் சிறுமி குறித்து எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
5ம் நாளாக சிறுமியை தேடும் பணி நடந்தது. அதேநேரத்தில், சிறுமியின் தாயாரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். சிறுமி பிறந்தநாளுக்கு வந்திருந்த உறவினர்களையும் தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், நடுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏதேனும் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளதா? அதற்கான தடயடங்கள் எதாவது இருக்கின்றதா? என மோப்ப நாய் உதவியுடனும், கைரேகை நிபுணர்களுடனும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விழுப்புரம் எஸ்பி மதிவாணன் நேற்று கூறுகையில், ‘‘சிறுமி மாயமான வீட்டின் வாசலில் உள்ள இரு கதவுகளில் ஒரு கதவு திறந்திருந்தது.
தவறான கண்ணோட்டத்தில் உள்ள உள்ளூர் நபர்கள் மற்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. செஞ்சி உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் சிக்கி கைதானவர்களின் தற்போதைய நிலை, இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்தின்பேரில் 10க்கும் மேற்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளோம். தொடர்ந்து, தேடுதல் பணி நடக்கிறது. மேலும், 5 தனிப்படைகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் என 200க்கும் மேற்பட்ட போலீசார் விழுப்புரம், வேலூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடுதல் பணியில் உள்ளனர்’’ என்றார்.
இதனிடையே, நேற்று செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சிறுமி மாயமான விவகாரத்தில் சிறுமியை கண்டுபிடித்து தருவோர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தவெக விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குண.சரவணன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.


