கடலூர், ஆக. 17: கடலூர் மாநகரில் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இருந்து கடலூர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் வழியாக சென்றது. நேற்று இரவு 7:10 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வந்த ராமேஸ்வரம்- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் பின்னர் புறப்பட்டுச் சென்ற நிலையில் கடலூர் அருகே உள்ள கம்மியம்பேட்டை பகுதியில் சிக்னல் கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்றது.
இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை உள்ளிட்ட ரயில்வே கேட்கள் மூடப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். ரயில்வே கேட்டு மூடப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ரயில்வே துறையினர் தகவல் அறிந்து வந்து சிக்னல் கோளாறு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு 7.15 முதல் இரவு 7:45 வரை சிக்னல் சரி செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடலூர் வழியாக செல்ல வேண்டிய மற்ற ரயில்களும் இதனால் காலதாமதமாக வருகை தந்தன.


