மாளிகைமேடு, எல்.என்.புரம் பகுதியில் விஷ வண்டு கடித்து 16 பேர் படுகாயம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பண்ருட்டி, அக். 15: பண்ருட்டி ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியில் நேற்று காலை 100 நாள் வேலை திட்ட பணி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ வண்டு கூட்டமாக வந்து கடித்துள்ளது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விஷம் வண்டு கூட்டம் பக்கத்து ஊரான அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் மாளிகைமேடு சித்தேரியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தாக்கியது.
இதில் மாளிகைமேடு புதுகாலனியை சேர்ந்த அலமேலு (50), கன்னிமா (70), செல்வி (36), எஸ்.கே.பாளையம் கோயில் தெருவை சேர்ந்த மன்னம்மாள் (45), மாளிகைமேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பூரணி (40), ஐயனார் கோயில் தெருவை சேர்ந்த சிவகலா (35), சுகந்தி (38), கவுசல்யா (43), நீலா (50) உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து மயக்கமடைந்தனர். அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ வண்டு கடித்து 16 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


