புதுச்சேரி, அக். 15: புதுச்சேரி முதலியார்பேட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்விழி (54). இவரது கணவர் கிருஷ்ணராஜ், புதுச்சேரியில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் வில்லியனூர் மூலகடையை சேர்ந்த ராமச்சந்திரன் (56) மற்றும் அவரது மனைவி மாலதி (54) ஆகியோர் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தங்கள் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் எனக்கூறியுள்ளார்.
இதனை நம்பிய மலர்விழி, கிருஷ்ணராஜ் ஆகியோர் கடந்த 2024ம் ஆண்டு பல்வேறு தவணைகளில் ரூ.29 லட்சத்தை வழங்கியுள்ளனர். இதற்கிடையே, கணவர் கிருஷ்ணராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மலர்விழியும் அவரது மகள் ஆகியோர் தம்பதியினரைச் சந்தித்து முதலீடு செய்யப்பட்ட தொகையை திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் எதிரே மலர்விழி, தம்பதியினரை சந்தித்து மீண்டும் பணத்தை திருப்பி கேட்டபோது, பணத்தைக் கேட்டு வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து மலர்விழி, அந்த தம்பதி பற்றி விசாரித்தபோது, இருவரும் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும், இதேபோன்று பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்விழி இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ராமச்சந்திரன் மற்றும் மாலதி மீது போலீசார் மோசடி வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


