செஞ்சியில் பிறந்த நாள் கொண்டாடியபோது மாயமான சிறுமியை 2வது நாளாக தேடும் பணியில் போலீசார் தீவிரம்: துப்பு கிடைக்காததால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
செஞ்சி, அக். 14: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் விஜி சென்னையில் டிப்ளமோ படித்து வருகிறார். 2வது மகள் ஹேமாவதி (7) ஆலம்பூண்டியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஹேமாவதிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். விழா முடிந்து இரவு, காற்றுக்காக கதவுகளை திறந்து வைத்துவிட்டு மகளுடன் பெற்றோர் தூங்கிய நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் எழுந்து பார்த்தபோது, மகள் ஹேமாவதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்களது உறவினர்கள், சிறுமியின் தோழிகள் வீடு உட்பட கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடினர். எனினும் சிறுமி கிடைக்கவில்லை.
இதையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. மதிவாணன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சிறுமியை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் ட்ரோன் கேமிரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகள், புதர் மற்றும் கிணற்று பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் நடுப்பட்டு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். விடிய விடிய தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று 2வது நாளாக சிறுமியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. சிறுமி எங்கே இருக்கிறார், அவர் பாதுகாப்புடன் உள்ளாரா? என்ற அச்சம் பெற்றோரிடம் எழுந்துள்ளதால் அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.
இதனிடையே சிறுமி மாயமான தகவலறிந்த செஞ்சி பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். பின்னர் காவல்துறை உதவியுடன் சிறுமியை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக உறுதியளித்தார். இதனிடையே விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மேற்பார்வையில் செஞ்சி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையில் குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுமியை யாராவது தூக்கிச் சென்றார்களா? அல்லது விலங்குகளின் பிடியில் அவர் சிக்கினாரா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
இதனால் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் விழுப்புரம் சரக டிஜஜி அருளரசு சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு, சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என தனிப்படையினருக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான தகவல்களையும் சேகரித்து அதில் ஏதேனும் சந்தேகப்படும்படியான நபர்களின் உரையாடல்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து, அதன்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


