அனுமதியின்றி நாட்டு பட்டாசு தயாரித்து வைத்திருந்த கணவன், மனைவி கைது: ரூ.2 லட்சம் மதிப்பில் 22 மூட்டை நாட்டு பட்டாசு, வாணவெடிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை, அக். 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொரட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசால் கடந்த 2023ம் ஆண்டு பட்டாசு தயாரிக்கும் இடத்துக்கு சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தின் பின்பக்க கதவை திறந்து நாட்டு பட்டாசு மற்றும் வாணவெடிகள் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 21 மூட்டை நாட்டு பட்டாசுகள் மற்றும் ஒரு மூட்டை வாணவெடிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அனுமதி இல்லாத சீல் வைக்கப்பட்ட இடத்தில் நாட்டு பட்டாசு தயாரித்து பதுக்கி வைத்திருந்த திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவுலாபுரம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார் (46) மற்றும் அவரது மனைவி சத்யா (37) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும்.
கடந்த 2023ம் ஆண்டு பட்டாசு தயாரித்து தீவிபத்து ஏற்பட்டு உயிரிழந்த இடத்தை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த இடத்தில் பின்பக்க கதவை திறந்து நாட்டுப்பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


