கடலூர், அக். 10: கடலூரில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கடலூர் கோஸ்டல் சிட்டி சாரிட்டபில் டிரஸ்ட் இணைந்து ரூ.1.5 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் பணிக்கு வந்தபோது சுடுகாட்டில் உள்ள 6 சிசிடிவி கேமராக்கள், 6 மின்விளக்குகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார செடிகள் சேதமடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு உடைந்து கிடந்த பொருள்கள் மற்றும் சேதமடைந்து காணப்பட்ட செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டு வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் இவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. அப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அங்கு சமூக விரோதிகள் மது அருந்துவது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று மது குடிக்க வந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கடலூர் கோஸ்டல் சிட்டி சாரிட்டபில் டிரஸ்ட் நிர்வாகிகள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடலூரில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


