Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு; வழக்கறிஞர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்: போலீஸ் குவிப்பு

காட்டுமன்னார்கோவில், அக். 10: காட்டுமன்னார்கோவிலில் வழக்கறிஞர் சங்க தலைவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கக்கன் நகரை சேர்ந்தவர் தங்க விக்ரம் (40). காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் நலச்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் செட்டித் தெருவில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதிய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார், தங்க விக்ரமை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கறிஞரைத் தாக்கிய மர்ம கும்பல் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாகத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கும் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நலச்சங்கத் தலைவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மேலும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. உடனடியாக காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.