முஷ்ணம், ஆக. 10: முஷ்ணம் நாச்சியார்பேட்டை சாத்தா வட்டம் செல்லும் சாலை ஓரம் காத்தாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூசாரியாக சந்தோஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த ஆண், பெண் சாமி கும்பிட்டனர். பின்னர் பூசாரி பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டார். மீண்டும் வந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 2 கிராம் தங்கத்தால் ஆன தாலி திருடு போனது கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகி துரைசாமியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முஷ்ணம் காவல் நிலையத்தில் துரைசாமி அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் குழந்தைவேலு சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பூசாரி பக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு கோயிலுக்கு வந்த ஆண், பெண் ஆகிய இருவர் அம்மன் கழுத்தில் இருந்த ரூ.30000 மதிப்பிலான தாலியை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



