புதுச்சேரி, அக். 8: புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், லாஸ்பேட்டையை சேர்ந்த பவித்ரன்(18) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


