உளுந்தூர்பேட்டை, ஜூலை 8: உளுந்தூர்பேட்டை அருகே 8 வயது சிறுமிக்கு 16 வயது மாணவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்1 படிக்கும் 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுக்கு, சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பாலியல் தொந்தரவு சம்பவம் வெளியே தெரிந்ததால் அதிர்ச்சியடைந்த, அந்த மாணவன் துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார், சிறுவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டப் பிரிவின்கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
