வடலூர், செப். 7: வடலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி அபிலா(32). இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், 9 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அபிலா, கடந்த 8 ஆண்டுகளாகத் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். இவர் காடாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிறைவடைந்ததும் மாலை 3.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அபிலா, இரவு 11.30 மணிக்கு உணவருந்திவிட்டு அருகிலிருந்த அறைக்குச் சென்றுள்ளார். பின்னர், நள்ளிரவில் அந்த அறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அபிலாவின் தங்கை பாலாம்பிகா அளித்த புகாரின் பேரில், வடலூர் காவல்துறையினர் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆன்லைனில் ரூ.3 லட்சம் பணத்தை இழந்து ஏமாற்றமடைந்ததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் அபிலா தற்கொலை செய்துகொண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


