கடலூர், ஜூலை 6: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய எஸ்ஐ பாபு மற்றும் போலீசார், கடலூர் அடுத்த எம்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.புதூர் சுடுகாடு அருகே நின்றிருந்த நபர், போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது, 50 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், எம்.புதூரை சேர்ந்த இளங்கோ மகன் ரமணா(23) என தெரிந்தது. திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் கடலூர் துறைமுக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பச்சையாங்குப்பம் அரசு பள்ளி அருகே இளைஞர் ஒருவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து பச்சையாங்குப்பம் சுரேஷ் மகன் தீனா(24) என்பவரை கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம்: பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் கோபால், மாயகிருஷ்ணன், ராஜசேகர், விஸ்வநாதன் உள்ளிட்ட போலீசார் மேல்கவரப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல் கவரப்பட்டு சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி பைக் அருகில் நின்றிருந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் சங்கர் மகன் சக்திவேல்(21), அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் தினேஷ் பாபு (22) என தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.


