சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் அதிமுக பலம் குறைகிறது
விழுப்புரம், மே 6: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றதால் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் காலியான 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்றை கூட்டணிக்காக பாமகவிற்கு ெகாடுத்துவிட்டதால், தற்போது மேலும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய உள்ள நிலையில் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்துள்ளது.
அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். இதனால் கட்சியில் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி மீண்டும் கடந்த 2022ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் 2028 வரை உள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் சீட்டு வாங்கி போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது சி.வி.சண்முகம் தன்வசம் உள்ள எம்பி பதவியை, எம்எல்ஏ பதவியேற்புக்கு முன்பு ராஜினாமா செய்ய உள்ளார். இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரலில் அதிமுகவில் காலியான 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்றை தம்பிதுரைக்கும், மற்றொன்றை சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்காக பாமகவிற்கு விட்டுக்கொடுத்து அக்கட்சியை சேர்ந்த அண்புமணி மாநிலங்களவை உறுப்பினரானார். தற்போது சி.வி.சண்முகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் தற்போது தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். இதனால் அதிமுகவுக்கு மாநிலங்களவையின் பலம் மேலும் குறைந்துள்ளது. காலியாகும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறுமா? என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தற்போது 2028ம் ஆண்டு தான் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகும் நிலையில் அப்போதுதான் தேர்தல் நடைபெறலாம் என்றும் கூறப்படுகின்றது.

