Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

முதல் மாநாடு, கட்சி கொடி, பாடலை அறிமுகப்படுத்திய விழுப்புரம் உள்பட 8 மாவட்டத்தில் தவெகவுக்கு ‘ரெட் கார்டு’ போட்ட மக்கள் ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை

விழுப்புரம், மே 6: தவெக கட்சி தொடங்கி முதல் மாநாடு நடத்திய விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சியை பிடிப்பதற்காக மெஜாரிட்டி கிடைக்காததால் மற்ற கட்சிகளின் உதவியை நாடும் நிலை தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல மாவட்டங்களில் அதிக தொகுதிகளை வென்ற தவெக விழுப்புரம், தென்காசி, நாகப்பட்டினம், அரியலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நீலகிரி, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

தவெக கட்சியை தொடங்கி முதல் மாநாடு நடத்தி கட்சி கொடியையும், அதற்கான பாடலையும் தவெக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்தான் நடத்தியது. தவெகவுக்கு அச்சாரம் போடப்பட்டதாக இந்த விக்கிரவாண்டி மாநாட்டையே அக்கட்சி தலைவர் விஜய் கூறிவந்தார். இதனால் நடந்துமுடிந்த தேர்தலில் இந்த தொகுதியில்கூட அவர் போட்டியிடப்போவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட தவெக வெற்றி பெறவில்லை. அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது.

திமுக சார்பில் விழுப்புரத்தில் லட்சுமணன், வானூரில் கௌதம் திராவிட மணி, விசிக சார்பில் திண்டிவனத்தில் வன்னிஅரசு, பாமக சார்பில் செஞ்சியில் கணேஷ்குமார், விக்கிரவாண்டியில் சிவக்குமார், அதிமுக சார்பில் மயிலத்தில் சி.வி.சண்முகம், திருக்கோவிலூர் பழனிச்சாமி ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர். விழுப்புரத்தில் மோகன்ராஜ், விக்கிரவாண்டியில் வடிவேல், மயிலத்தில் விஜய் நிரஞ்சன், திண்டிவனத்தில் சக்திவேல், வானூரில் சுரேஷ், திருக்கோவிலூரில் பரணி பாலாஜி ஆகிய தவெக வேட்பாளர்கள் 2வது இடமும், செஞ்சியில் தவெகவின் சந்திரசேகரன் 3ம் இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் தவெக தோற்றது. இங்குள்ள அரியலூரில் அதிமுகவின் தாமரை எஸ்.ராஜேந்திரன் வெற்றி பெற திமுகவின் லதா பாலு 2ம் இடமும், தவெகவின் சிவக்குமார் 3ம் இடமும் பெற்றனர். ஜெயங்கொண்டத்தில் பாமகவின் வைத்தியலிங்கம் வெற்றிபெற திமுகவின் கண்ணன் 2ம் இடமும், தவெகவின் கவிதா ராஜேந்திரன் 3ம் இடம் பெற்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் திமுகவின் ராஜூ வெற்றி பெற அதிமுகவின் ராமு 2ம் இடமும், தவெகவின் தங்கராஜூ3ம் இடமும் பெற்றனர். ஊட்டியில் பாஜவின் போஜராஜன் வெற்றி பெற தவெகவின் இப்ராகிம் 2ம் இடம் பெற்றார். கூடலூரில் திமுகவின் திராவிடமணி வெற்றி பெற அதிமுகவின் பொன் ஜெயசீலன் 2ம் இடமும், தவெகவின் தீபக் சாய் கிஷோர் 3ம் இடமும் பெற்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டியில் இந்தியகம்யூவின் மாரிமுத்து வெற்றி பெற அதிமுகவின் பாலதண்டாயுதம் 2ம் இடமும், தவெகவின் பாண்டியன் 3ம் இடமும் பெற்றனர். மன்னார்குடியில் அதிமுகவின் காமராஜ் வெற்றிபெற திமுகவின் டி.ஆர்.பி.ராஜா 2ம் இடமும், தவெகவின் ராஜராஜன் 3ம் இடமும் ெபற்றனர். திருவாரூரில் திமுகவின் பூண்டி கலைவாணன் வெற்றி பெற, பாஜவின் கோவிசந்துரு 2ம் இடமும், தவெகவின் வீரமணி 3ம் இடமும் பெற்றனர். நன்னிலம் தொகுதியில் ஆர்.காமராஜ் வெற்றி பெற திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ ேவட்பாளர் முகமது முபாரக் 2ம் இடமும், தவெக பிரபாகரன் 3ம் இடமும் பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை 3 தொகுதியிலும் திமுக அணி வென்றது.

மயிலாடுதுறையில் காங்கிரசின் ஜமால் யூனுஸ் முகமது வெற்றி பெற, பாமகவின் சித்தமல்லி பழனிச்சாமி 2ம் இடமும், தவெகவின் அருண் ரஷீத் 3ம் இடமும் பெற்றனர். பூம்புகாரில் திமுகவின் நிவேதா முருகன் வெற்றி பெற, அதிமுகவின் எஸ்.பவுன்ராஜ் 2ம் இடமும், தவெகவின் விஜயாலயன் 3ம் இடமும் பெற்றனர். சீர்காழியில் திமுகவின் செந்தில்செல்வன் வெற்றி பெற, அதிமுகவின் சக்தி 2ம் இடமும், தவெகவின் கோபிநாத் 3ம் இடமும் பெற்றனர். நாகை மாவட்டத்தில் நாகையில் திமுகவின் மமக ஜவாஹிருல்லா வெற்றி பெற, அதிமுகவின் தங்ககதிரவன் 2ம் இடமும், தவெகவின் பாத்திமா பர்கான 3ம் இடமும் பெற்றனர். கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் லதா வெற்றிபெற, தவெகவின் செந்தில் பாண்டியன் 2ம் இடம் பெற்றார். வேதாரண்யத்தில் அதிமுகவின் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற, திமுகவின் புகழேந்தி 2ம் இடமும், தவெகவின் கிங்க்ஸ்லி ஜெரால்ட் 3ம் இடம் பெற்றார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் திமுகவின் கலைகதிரவன் வெற்றி பெற, அதிமுகவின் செல்வமோகன் பாண்டியன் 2ம் இடமும், தவெகவின் ராஜபிரகாஷ் 2ம் இடம் பெற்றார். கடையநல்லூரில் மதிமுகவின் ராஜேந்திரன் வெற்றி பெற அதிமுகவின் கிருஷ்ணமுரளி 2ம் இடமும், தவேகவின் ஜலீல் 3ம் இடமும் பெற்றனர். சங்கரன்கோவிலில் அதிமுகவின் திலிபன் ஜெய்சங்கர் வெற்றிபெற, தவெகவின் ராமராஜன் 2ம் இடம் பெற்றார். வாசுதேவநல்லூரில் திமுகவின் ராஜா வெற்றிபெற பாஜவின் ஆனந்தன் அய்யாசாமி 2ம் இடமும், தவெகவின் அழகுராணி 3ம் இடமும் பெற்றனர். ஆலங்குளத்தில் திமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற அதிமுகவின் பிரபாகரன் 2ம் இடமும், தவெகவின் விபின் சக்கரவர்த்தி 3ம் இடமும் பெற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் வெற்றி பெற தவெகவின் பெர்வின் கிங்ஸ்2ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற தவெகவின் மைக்கேல் குமார் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செல்லசுவாமி வெற்றி பெற, தவெகவின் கிருஷ்ணகுமார் தோற்றார். கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற தவெகவின் சபின் தோற்றார்.குளச்சலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற, தவெகவின் பிரேம் அலெக்ஸ் லாரன்ஸ் 2ம் இடம் பெற்றார். கன்னியாகுமரி அதிமுகவின் தளவாய் சுந்தரம் வெற்றி பெற, திமுகவின் மகேஷ் 2ம் இடமும், தவெகவின் மாதவன் 3ம் இடம் பெற்றார்.