புவனகிரி, செப். 5: புவனகிரி அருகே 2 பைக்குகள் மீது மினி டெம்போ மோதியதில் தவெக நிர்வாகிகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேல்குறியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குகன்(24). தவெக முகாம் செயலாளர். அருகில் உள்ள கீழ்குறியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைராஜன்(41). தவெக கிளை செயலாளர். இருவரும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இருவரும் வழக்கம்போல் ஒரே பைக்கில் சிதம்பரத்திற்கு வேலைக்கு சென்றனர்.
அங்கு வேலை இல்லாததால் மீண்டும் திரும்பி வீட்டிற்கு சென்றனர். விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில் உள்ள சி.முட்லூர் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த மினி டெம்போ திடீரென மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இவர்களது பைக் மற்றும் மற்றொரு பைக் மீது அடுத்தடுத்து மோதியது.இதில் எலக்ட்ரீஷியன்கள் இருவரும், மற்றொரு பைக்கில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜோசியக்காரர் அஜித்குமார்(29) என்பவரும் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்குகள் மீது மினி டெம்போ மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


