Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுச்சேரிக்கு வரும் நித்யானந்தாவுக்கு பாதுகாப்பு கொடுங்கள்: முதல்வரிடம் தியான பீட நிர்வாகிகள் கோரிக்கை

புதுச்சே, செப். 5: புதுச்சேரி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கைலாசா நித்யானந்தா தியான பீடத்துக்கு, குடமுழுக்கு செய்வதற்கான நடவடிக்கைகளை அதன் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சட்டசபைக்கு வந்த நித்யானந்தரின் சீடர்கள், முதல்வர் ரங்கசாமியை கடந்த 2ம் தேதி சந்தித்தனர். அப்போது, ஏம்பலத்தில் அமைந்திருக்கும் தியான பீடத்துக்கு விரைவில் குடமுழுக்கு செய்யப்படவுள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், சுவாமி நித்யானந்தா புதுச்சேரி வருவது தொடர்பாக மத்திய அரசிடமும் பேசி வருகிறோம். அதனால் அவர் புதுச்சேரிக்கு வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு, `சரி, அவர் வரட்டும்.. பார்த்துக் கொள்ளலாம்., என்று சொன்ன முதல்வர் ரங்கசாமிக்கு, கைலாசா சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை தியான பீட நிர்வாகிகள் வழங்கினர். தொடர்ந்து சபாநாயகர் அன்பழகனை சந்தித்து குடமுழுக்கு விழா அழைப்பிதழை வழங்கினர். அப்போது பேசிய அன்பழகன், அங்கு அவருக்கு சிலை இருக்கிறதா? அப்புறம் ஏன் அவரை கடவுளாக்கிவிட்டீர்கள் என்றார். அவரை குருவாக நினைத்து செய்கிறோம் என்றனர்.

அவர் நல்ல குடும்பம்தானே செய்கிறார், அவர் ஒரு நாடு வைத்திருகிறாரே அங்கு உங்களை அனுப்புகிறாரா? வேலைக்கு போகாமல் வெட்டி வேலையா? எனக்கேட்ட சபாநாயகர் சிரித்துக்கொண்டே வருகிறேன், எனக்கூறி தியானபீட நிர்வாகிகளை வழியனுப்பி வைத்தார்.

பாலியல், ஆட்கடத்தல், சிறார்களை தவறாக வழி நடத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவான நித்யானந்தா, கடந்த 2020ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதிலிருந்து தொடர்ச்சியாக வீடியோக்களில் மட்டும் நித்யானந்தா பேசி வருகிறார். நித்யானந்தாவுக்கு இன்டர்போல் கடந்த 2020ம் ஆண்டு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது போன்ற சூழலில் நித்யானந்தா புதுச்சேரிக்கு வருவதாக அவரின் சீடர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.