திட்டக்குடி, ஆக. 4: முகவரி கேட்பதுபோல் பைக்கில் வந்த 2 பேர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் ஊராட்சி மன்ற திருமண மண்டபம் அருகே துரைசாமி மகன் சின்னசாமி(50) என்பர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு இவரது உறவினரான திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் அருகே உள்ள ஊத்துக்குளியை சேர்ந்த முத்துசாமி மனைவி மலர்மொழி(55) என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு, மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டு வாயில் முன்பு தரையில் அமர்ந்து சமையலுக்கு மலர்மொழி வெங்காயம் உரித்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 நபர்கள் மலர்மொழியிடம் முகவரி கேட்பது போல் அருகே வந்து மலர்மொழி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்மொழி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து மலர்மொழி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


