Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

புதுவை ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உயிரிழந்த மாணவரின் கண்கள் தானம்

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் ஓடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த ஆரணி மாணவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ராணுவத்தின் அக்னிவீரர் ஆள்சேர்ப்பு முகாம் கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முகாமில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த 10,000 ஆயிரம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் நாளில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புது தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாபுவின் 2வது மகன், ஆரணியில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்த கோகுல்(18) என்பவர், ஏற்கனவே எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து புதுச்சேரியில் நடந்த அக்னிவீரர் ராணுவ உடல்தகுதி தேர்வு முகாமில் பங்கேற்றார்.

மொத்தம் 4 சுற்று ஓட்டப்பந்தயத்தில் கடைசி சுற்று ஓடும்போது கோகுல் திடீரென மயங்கி விழுந்தார். உடனே மருத்துவக் குழுவினர் கோகுலுக்கு முதலுதவி அளித்து, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மாணவர் கோகுலின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமையில் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலையில் ஆயுட்கால உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் மாணவரின் கண்களை தானமாக பெற்றனர். ராணுவ வீரராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனாலும், தனது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் நான்கு பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றிய கோகுல் குடும்பத்தினரின் மனிதநேய முடிவு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தொடர்ந்து உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.