புதுச்சேரி, ஜூலை 3: கோடை வெயில் குறையாமல் சுட்டெரித்து வரும் நிலையில் நேற்று புதுவையில் 101.5 டிகிரியும், கடலூரில் 102 டிகிரியும் பதிவானது. புதுச்சேரியில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. மே மாதத்தில் 9 நாட்களும், ஜூன் மாதத்தில் 15 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது. நடப்பாண்டிலேயே புதிய உச்சமாக ஜூன் 5ம் தேதி வரை 104 டிகிரி பதிவாகி இருந்தது. மேலும், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதம் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், மதியம் கிழக்கிலிருந்து வீசக்கூடிய கடற்காற்று பல நாட்கள் வீசவில்லை.
தற்போது ஜூலை மாதம் துவங்கியுள்ள நிலையில் 1ம் தேதி 100 டிகிரியும், நேற்று 101.5 டிகிரி என இரண்டு நாட்களும் வெயில் சதம் அடித்துள்ளது. நேற்று பரவலாக மேக மூட்டம் காணப்பட்டாலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசியது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.இதேபோல், கடலூரிலும் நேற்று அனல் காற்றுடன் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இரவிலும் வெப்பச்சலனம் காணப்பட்டதால், பொதுமக்கள் புழுக்கத்தால் தூக்கம் இழந்து தவித்தனர்.
