கிராமசபை கூட்டத்தில் நூதன போராட்டம்; கருப்பு சட்டை அணிந்து, கண்ணில் கருப்புத்துணி கட்டி பங்கேற்ற சமூக ஆர்வலர் அதிகாரியுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
புவனகிரி: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் சுமார் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு மின் மோட்டார், மின் மோட்டார் வைப்பதற்கான அறை, 500 மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி பூவாலை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்வளவன் என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.
பலமுறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் இதுகுறித்து எடுத்துக்கூறி, நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். ஆனால் இவரது கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மின் மோட்டார் மற்றும் குடிநீர் இணைப்புகள் தராததால் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்க தொட்டி செயல்பாட்டுக்கு வராமலேயே முடங்கி உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி பூவாலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பணி மேற்பார்வையாளர் ஆதித்யன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், சமூக ஆர்வலரான தமிழ்வளவன் என்பவர் குடிநீர் தொட்டிக்கு மோட்டார் அறை மற்றும் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்தபடி, கண்களில் கருப்பு துணியை கட்டி கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், ஏன் குடிநீர் தொட்டிக்கு இதுவரை மின் மோட்டார் அமைக்கவில்லை எனக்கூறி ஊராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தமிழ்வளவன் கூறுகையில், பூவாலை கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டிக்கு மின் மோட்டார் போன்ற வசதிகள் கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும் அரசு நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளிக்கப்பட்டதோடு, இரண்டு முறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை, என கூறினார்.


