செஞ்சி அருகே மாயமாகி 21 நாள் ஆனது; செங்கல் சூளை தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவரிடம் துருவி துருவி விசாரணை
செஞ்சி: செஞ்சி அருகே மாயமான சிறுமி வழக்கில் செங்கல் சூளை தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் துப்பு கிடைக்காததால் சிறுமி மாயமாகி 21 நாள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதி 2வது மகள் ஹேமலதா (7). இவர் கடந்த மாதம் 11ம் தேதி இரவு பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், மறுநாள் மாயமானார். இதுகுறித்து பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி கீதா தலைமையிலான போலீசார் கடந்த 9 நாட்களாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மாயமானாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் டிஎஸ்பி கீதா மற்றும் ஆய்வாளர்கள் பாலமுருகன், ரேவதி உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாருடன் அடுத்தகட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் பல்வேறு இடங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியும் வருகின்றனர். சிறுமி குறித்த தகவல்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2 சிபிசிஐடி டிஎஸ்பிக்களும் ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் சிறுமியின் தாய், சிறுமியின் சகோதரி, அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை நடத்தி வரும் பூசாரி மற்றும் சிறுமிக்கு ஜாதகம் எழுதி கொடுத்த காத்தவராயன் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடமும் விசாரணை நடத்தினர். சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தையிடமும், மீண்டும் விசாரணை செய்தனர்.
செஞ்சி ஆலம்பூண்டி பகுதியில் உள்ள செங்கல் சூளை தொழிலாளர்களிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். காரணம், சிறுமி காணாமல் போன அக்டோபர் 11ம் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அந்த செங்கல்சூளை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய 4 தொழிலாளர்கள் என மொத்தம் 5 பேரிடம் போலீசார் தீவிர மேற்கொண்டனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள டிராக்டர் டிரைவர் அஜித்குமாரிடம் விசாரணை செய்தனர். மேலும் உள்ளூரில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மாயமாகி 21 நாள் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.


