Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாடகை பாக்கி தரவில்லை என்று கூறி மார்க்கெட்டை மூடிய ஒப்பந்ததாரர்கள் மீன் வியாபாரிகள் சாலை மறியல்

விழுப்புரம், ஜூலை 2: விழுப்புரத்தில் திறந்தவெளியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதை ெதாடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.3.10 கோடியில் மீன்மார்க்கெட் கட்டப்பட்டு கடந்த 2025ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டு மொத்தம், சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. மீன் மார்க்கெட் பராமரிப்பு தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு கடைகளுக்கு அவர்கள் மாதந்தோறும் வாடகை வசூலித்து வருகின்றனர். தினமும் ஏராளமான மீன் வியாபாரிகள் வெளியூர்களிலிருந்து வந்து மொத்தமாக வாங்கியும், பொதுமக்கள் சில்லறைகளில் வாங்கியும் செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை மீன் வியாபாரிகள் வந்தபோது, மார்க்கெட் பூட்டுபோட்டு மூடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மீன்வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, கடைகள் வைத்திருக்கும் பல வியாபாரிகள் வாடகை தராமல் நிலுவை வைத்துள்ளனர். பல லட்சம் முதல் போட்டு நாங்கள் நகராட்சியில் ஒப்பந்தம் எடுத்துள்ளோம். வாடகை கொடுக்காததால் நஷ்டமடைந்து வருவதாக தெரிவித்தனர். அப்போது மீன் வியாபாரிகள் தரப்பில், மார்க்கெட்டில் எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்காமல் வாடகை கேட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தால் மட்டுமே வாடகை பாக்கி கொடுப்போம் என்று கூறினர்.

தொடர்ந்து மார்க்கெட்டை திறக்காததால் பல லட்சம் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி மீன் வியாபாரிகள் புதுச்சேரி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த விழுப்புரம் நகர காவல்நிலைய போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்ததாரர்களிடம் பேசி மீன்மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.