40 ஆண்டுகள் குடிநீர் வழங்கிய காலாவதியான நீர்தேக்க தொட்டிக்கு பிரியாவிடை கொடுத்த கிராம மக்கள்
ஈரோடு, ஜன.25: ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக குடிநீர் வழங்கிய காலாவதியான மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட உள்ளதையொட்டி அந்த கிராம மக்கள் தொட்டிக்கு மலர் தூவி மரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனர். ஈரோடு அடுத்த 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிகாட்டுவலசு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியானது கடந்த 1988ம் ஆண்டு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழமையின் காரணமாக காலாவதியானது. இந்த தொட்டிக்கு அருகிலேயே 70 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால், காலாவதியான பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட உள்ளது. தொடா்ந்து 40 ஆண்டுகளாக குடிநீர் வழங்கிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அந்த கிராம மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனர்.