Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூய்மைப்பணிகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகளின் பராமரிப்பு, குடிநீர் வசதிக்கு மாதம் ரூ.5,000 வரை நிதி மேலாண்மை இயக்குநர் உத்தரவு

வேலூர், செப்.30: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் தினசரி பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மற்றும் குடிநீர் வசதிக்காகப் பகுதிவாரியாக மாதம்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை நிதி வழங்கி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 761 சில்லறை மது விற்பனை கடைகள் இயங்கி வந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகில் இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டன.

தற்போது 4 ஆயிரத்து 48 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில் எலைட் கடைகளின் எண்ணிக்கை 199 ஆக உள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில் 70 கடைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 கடைகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90 கடைகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 306 கடைகள் என உள்ளன. எலைட் கடைகளை பொறுத்தவரை வேலூர் மாவட்டத்தில் 2, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் தலா ஒன்று என 4 கடைகள் மட்டுமே உள்ளன.

இந்த கடைகள் அனைத்தும் வாடகை கட்டிடங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த கடைகள் அனைத்தும் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே இயங்கி வருகின்றன. கடைகளுக்கான வாடகை மற்றும் மின்கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே செலுத்தும் நிலையில், குடிநீர் வசதி, பிற பராமரிப்புப்பணிகளுக்காகவும், அன்றாட செலவினங்களுக்காகவும் நிதி என்பது குறைவாக ஒதுக்கப்படுவதாக வேதனை குரல்கள் எழுந்து வந்தன.

ஏற்கனவே தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளின் அன்றாடச் செலவுகளுக்காக 2003ம் ஆண்டு முதல் சில்லறைச் செலவு நிதி வழங்கப்பட்டு வந்தது. இது கடைசியாக 2023ல் கடை ஒன்றுக்கு மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் தூய்மை மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரிக்கவும், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அண்மையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், பழைய சில்லறைச் செலவு நிதியான ரூ.750க்கு பதிலாக, கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அடிப்படையில் புதிய மாதாந்திர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் 842 கடைகளுக்கு கடை ஒன்றுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வரும் 835 கடைகளுக்கு கடை ஒன்றுக்கு மாதம் ரூ.4,000, ஊராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் 2,371 கடைகளுக்கு கடை ஒன்றுக்கு மாதம் ரூ.3,000 என மொத்தம் 4,048 டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான தொகை செப்டம்பர் மாதம் ஊதியத்துடன் இன்று(30ம் தேதி) கடைகளின் மேற்பார்வையாளர்களின் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்படும். இந்த தொகையை கொண்டு கடைகளின் வளாகத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், தூய்மை செய்வதற்கான பொருட்கள் வாங்குதல், குடிநீர் விநியோகம் செய்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய வேண்டும்.

கடையின் வாடகை, மின்சாரக் கட்டணம், கட்டிட பராமரிப்பு அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு இத்தொகையை பயன்படுத்தக் கூடாது. மேலும், அடுத்த 2027ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இத்தொகையானது ஆண்டுதோறும் 5 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்றும், மாவட்ட மேலாளர்கள் கடைகளை ஆய்வு செய்யும்போது தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.